நாமலுக்கு சமூக ஊடகங்கள் மூலம் கொலை அச்சுறுத்தல்! அநுர தரப்பு மீது சுமத்தப்படும் குற்றம்..
ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் அரச நிறுவனங்களை அரசியல் பழிவாங்கல்களுக்காகப் பயன்படுத்தும் 'Institutional Weaponization' என்ற தவறான அரசியல் உத்தியை தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தீவிரமாகப் பயன்படுத்தி வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதகாவும் சஞ்சீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டினார்.
கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தொடர்பான சமீபத்திய விவகாரங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வாக்குறுதிகளை மீறிய ஜனாதிபதி அநுர
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அரசியல் எதிராளிகளை முடக்குவதற்கும் அவர்களின் குரலை அடக்குவதற்கும் அரச அதிகாரமும் விசாரணை நிறுவனங்களும் தவறான முறையில் பயன்படுத்தப்படுகின்றன.

ஜனாதிபதி பயணம் செய்யும்போது பாதைகள் மூடப்படுவதில்லை என்ற அரசின் வாக்குறுதிகள் தற்போது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளன.
பேருவளை மற்றும் புலத்சிங்கள பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்தபோது வீதிகள் மட்டுமன்றி, பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் நுழைவது கூட தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் மீனவர்களுக்காக உறுதியளிக்கப்பட்ட புதிய செயலி குறித்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
நாமலுக்கு கொலை அச்சுறுத்தல்
மேலும், சமூக ஊடகங்களில் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக விடுக்கப்படும் கொலை அச்சுறுத்தல்கள் மற்றும் போலிப் பிரசாரங்கள் குறித்து பலமுறை முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும், விசாரணை நிறுவனங்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசு தனக்குச் சாதகமான ஒருசில தரப்பினருக்கு மட்டுமே சட்டத்தை நடைமுறைப்படுத்தி, ஏனையோரைப் புறக்கணிக்கின்றது.

இவ்வாறான அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் கைதுகளுக்குப் பயந்து எமது கட்சியின் அரசியல் பயணத்தை எக்காலத்திலும் நிறுத்தப் போவதில்லை.
கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையாக அனுராதபுரம் நகர சபை விளையாட்டு மைதானத்தில் பிரமாண்ட மக்கள் பேரணி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.
ஜனநாயக ரீதியான அரசியல் களத்தை ஒடுக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொதுமக்கள் தீவிரமாகக் கேள்விக்குட்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23