விசேட அமர்வுக்காக கூடவுள்ள நாடாளுமன்றம்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.02.2025) நாடாளுமன்றம் விசேட அமர்விற்காக கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்த சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான முடிவை நாடாளுமன்றத்திற்குத் தெரிவிப்பதற்காகவே இந்த அமர்வு கூட்டப்படவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் இன்று (10) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் இது முடிவு எட்டப்பட்டுள்ளது.
பிரதமரின் கோரிக்கை
அதன்படி, நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16இன் விதிகளின்படி, பிரதமர் சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் அமர்வுக்கான அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தை பரிசீலிக்க பெப்ரவரி 14ஆம் திகதி தொடர்புடைய அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவைக் கூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த உத்தரவை மதித்து, தேர்தலை மேலும் தாமதமின்றி நடத்த வேண்டியதன் அவசியத்தை சபைத் தலைவர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் சட்டமூலம்
இதற்கமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தை எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த சட்டமூலத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் திருத்தங்கள் எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10.00 மணிக்கு முன் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, நிதி துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற முறையில், முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி, 17ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாவது முறையாக ஜனாதிபதி வாசிப்பார் என்று பதில் செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)