கொத்மலை பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றை மீளத் திறக்கக் கோரி போராட்டம்
கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட டன்சினன் குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் விடுமுறை நிறைவடைந்த பின்னரும் திறக்கப்படாத நிலையில், அதனை உடனடியாக மீளத் திறக்கக் கோரி பெற்றோர்களும், மாணவர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட டிட்வா புயலின் தாக்கத்தின்போது, பாடசாலை அமைந்துள்ள டன்சினன் கீழ்ப்பிரிவு பகுதியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.
இதன் காரணமாக குறித்த பாடசாலையிலும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. எனினும், பின்னர் மக்கள் தங்களது சொந்த வீடுகளுக்கு மீளத் திரும்பியதைத் தொடர்ந்து, பாடசாலை கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதான கோரிக்கை
இந்த நிலையில், ஓகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை நிறைவடைந்த பின்னரும் குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் மீளத் திறக்கப்படவில்லை என பெற்றோர்களும் மாணவர்களும் தெரிவிக்கின்றனர்.

தற்போது பாடசாலை அமைந்துள்ள பகுதியிலோ அல்லது கிராமத்திலோ குறிப்பிடத்தக்க பாதிப்புகள் எதுவும் இல்லாத நிலையில், பாடசாலை தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பது மாணவர்களின் கல்வியை பாதிப்பதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பல கல்வியாளர்களையும் சமூகத்தின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களையும் உருவாக்கிய இந்தப் பாடசாலையை மீண்டும் திறந்து, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர் மற்றும் மாணவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.




