ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் மீது அதிருப்தி: பாலஸ்தீன தூதுவர் கடும் விமர்சனம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். ஸைட் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் விமர்சனங்களை முன்வைத்தப்பின்னர் அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இலங்கை, பாலஸ்தீன நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டமொன்று அச்சங்கத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கலாநிதி. சுரேன் ராகவன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். ஸைட்டும் பங்கேற்றுள்ளார்.
பாலஸ்தீன, இஸ்ரேல் மோதல்
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையின் நாடாளுமன்றத்தில் பாலஸ்தீன, இஸ்ரேல் மோதல் சம்பந்தமாக வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதனைவிடவும், பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக உள்ளது.
அத்துடன், பாலஸ்தீன மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கம் பல்வேறு தருணங்களில் குரல் எழுப்பியுள்ளது.
இருதரப்பு உறவு
அவ்வாறான நிலையில் தற்போது மிகவும் நெருக்கடியான சூழலொன்று காணப்படுகின்றது. ஆனால் இலங்கை அரசாங்கம் தற்போது நாடாளுமன்றத்தில் தீர்மானத்தினை நிறைவேற்றினாலும் அதற்கு அப்பால் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் எவ்விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.
விசேடமாக, உள்நாட்டில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களும் திட்டமிட்ட வகையில் மழுங்கடிக்கப்படுவதோடு அப்போராட்டங்களை முன்னெடுப்பதற்கான சுதந்திரங்கள் வழங்கப்படாத சூழலும் அவற்றை ஆரம்பத்திலேயே தடுத்துவிடுகின்ற நிலைமைகளும் அதிகமாக உள்ளன.
ஆகவே, பாலஸ்தீன மக்கள் மீதான உண்மையான கரிசனைகளை வெளிப்படுத்தும் அதேவேளை இலங்கை அரசாங்கம் அதற்கு பிரதிபலிக்க வேண்டும். அதுவரையில் எவ்விதமான எதிர்பார்ப்புக்களையும் நாம் கொள்ளவில்லை.” என்றார்.
இவ்வாறான கருத்துக்களை கூறிவிட்டு அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, பாலஸ்தீன தூதுவரின் வெளியேற்றத்தினை அடுத்து, குறித்த நட்புறவுச் சங்கத்தின் செயலாளர் நஸீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து வெற்றிடமாக காணப்பட்ட நிலையில் புதிய நியமனம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |