மொரிஷியஸ் நாட்டில் 14வது தமிழ் ஆசிரியர் மாநாடு (Photos)
மொரிசியசு நாட்டில் பன்னாடுகளைச் சேர்ந்த பலநூறு பேராளர்கள் கலந்துகொள்ளும் உலகத் தமிழாசிரியர் மாநாடு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று முன்தினம் (08.12.2023) மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்தில் ஆரம்பமானது.
இரண்டு நாள் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்து, சுவிற்சர்லாந்து முதலான நாடுகளைச் சேர்ந்த தமிழாசிரியர்கள் பங்கெடுத்துக்கொண்டனர்.
இந்த மாநாட்டை தொடக்கநிலைத் தமிழ் ஆசிரியர் கழகம், பன்னாட்டுத் தமிழ் கற்பித்தல் கற்றல் கழகம், மற்றும் உலகத் தமிழாசிரியர் பேரவை, இணைந்து நடத்துகின்றன. சைவநெறிக்கூடம் பேர்ன் சுவிட்சர்லாந்து அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையரும், சைவநெறிக்கூடத்தின் இணைப்பாளருமான சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார், முருகருசி. சிவலிங்கம் சசிக்குமார், சைவநெறிக்கூடம் உச்சிமுருகன் திருக்கோவில் அருட்சுனையர் திருநிறை. சின்னத்துரை சிறிரஞ்சன், நிறுவனர்களில் ஒருவரான நடராசா லோகேஸ்வரன் ஆகியோர் இம்மாநாட்டில் சிறப்புப் பேராளர்களாகப் பங்கெடுத்தனர்.
தமிழ்மொழியைச் சரளமாகப் பேசுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துதல், அதனை அடைய வழிமுறைகளைக் கண்டறிதல், தமிழ் மொழியை சரளமாகப் பேசுவதற்கு கற்றல் மற்றும் கற்பித்தல் துறையில் உள்ள சவால்களுக்குத் தீர்வு காண்பது, தமிழ்மொழியை கற்றல் கற்பித்தலுடன் மேலும் பேச்சுத் தமிழை பரவலாக்குவதன் வழிமுறைகளைக் கண்டறிதல் இந்த மாநாட்டின் அடைவு நோக்காகும்.
இந்நிலையில் மொரிஷியஸ் தொடக்கப்பள்ளி மாணவர்கள்மொரிஷியஸ் நாட்டிற்கு தமிழர்கள் வருகை அளித்த வரலாற்றினை குறுகிய இசைநாடகமாக மேடையில் அளித்திருந்தனர். இந்நிகழ்விற்கு தலைமை விருந்தினராக மொரிஷியஸ் நாட்டின் பதில்தலைவரும், கல்வி மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சருமான லீலாதேவி டூக்கண் லட்சுமுன் அவர்கள் வருகை அளித்திருந்தார்.
இம்மாநாட்டிற்கு அனைத்து நல்லிசைவுகளையும் மொரிஷியஸ் அரசு வழங்கி இருந்ததுடன் மொரிஷியஸ் நாட்டிற்கான இந்தியத்தூதர் நந்தினி சிங்ளாவும் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |