பலாலி சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்க நடவடிக்கை
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (21.01.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
காணிகளுக்கான இழப்பீடு
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அடிப்படை கட்டுமானங்கள் மற்றும் வசதிகளை துரிதமாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர், முதல்கட்டத்தில் இந்தப் பணிகளை முழுமைப்படுத்த எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கம் முன்னெடுப்பதற்கு 114 ஹெக்டேயர் நிலப்பரப்பு சுவீகரிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் விமான சேவைகள் நிறுவனத்தினர் குறிப்பிட்டுள்ளதோடு, கடலை நோக்கியதாக அந்த விஸ்தரிப்பு அமையும் என ஆளுநருக்கு தெரியப்படுத்தினர்.
இதேவேளை, காணிகளை சுவீகரிப்பதற்கு முன்னதாக 1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்துக்காக பெற்றுக் கொள்ளப்பட்ட காணிகளுக்கு இன்னமும் இழப்பீடு வழங்கப்படவில்லை என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
உள்ளூர் விமான சேவைகளை விரிவுபடுத்துவது
யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் விரிவாக்கத்தின்போது இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகளவில் கிடைக்கும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகளுக்கான நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதில் உள்ளூர் விமான சேவைகள விரிவுபடுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.
கொழும்பு – யாழ்ப்பாணம், மட்டக்களப்பு – யாழ்ப்பாணம் சேவைகளை முன்னெடுப்பதற்கு, பயணிகளின் தேவைப்பாடு தொடர்பான துல்லியமான தகவல்களை வழங்குமாறு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |