போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய - பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது 'X' தளத்தில் பதிவொன்றை இட்ட ட்ரம்ப், குறித்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த பதிவில், இரவில் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இரண்டு நாடுகளும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனை அறிவிப்பதில் தான் மகிழ்ச்சியடையதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்தின் அமைதி
இரண்டு நாடுகளும் பகுத்தறிவுடன் இந்த முடிவை எடுத்ததற்காக வாழ்த்துக்களை கூறுவதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
— Donald J. Trump (@realDonaldTrump) May 10, 2025
இதேவேளை, இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் டார் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய தரப்பில் உறுதி
அத்துடன், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை(12.05.2025) இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்கு இரு தரப்பினரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |