பிரதம பிக்கு ஒருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னக்குடா விகாரையின் பிரதம பிக்குவை 14 நாட்களுக்கு தடுத்து வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட விகாரையின் பிரதம பிக்கு ஒருவரை நேற்றைய தினம் ஏறாவூர் பொலிஸார் கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.
பிற மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுவன் பிக்குவாக படிப்பதற்காக விகாரையில் வந்து தங்கியிருந்து படித்து வந்துள்ள நிலையில் நீண்ட காலமாக பிரதம பிக்குவால் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்த நிலையில் சம்பவதினமான புதன்கிழமை சிறுவன் பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த பிக்குவை கைது செய்ததுடன், சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட பிக்குவை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தின் நீதிபதி முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே குறித்த சந்தேகநபரை 14 நாட்களுக்கு தடுத்து வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



