அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் விவசாய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்கும் நோக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஆளும் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
பிரதி அமைச்சர் டி.பி. சரத் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தற்போது நடைபெறும் விவசாயப் போராட்டங்களுக்குப் பின்னால் இருப்பது உண்மையான விவசாயிகள் அல்ல, மாறாக எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளே என தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் குழுக்களே இந்த போராட்டங்களை வழிநடத்துவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவர்களின் நோக்கம் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதல்ல, மாறாகப் போராட்டங்களை முன்னிறுத்தி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதே ஆகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயப் போராட்டங்களை ஒழுங்கமைக்கும் சில விவசாயத் தலைவர்களின் மோசடிப் பின்னணி மற்றும் அவர்கள் செய்யும் ஊழல் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் விரைவில் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
அரணகங்வில பகுதியில் நடைபெற்ற போராட்டம் ஒன்று குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
விவசாயத் தலைவர்கள் என்ற போர்வையில் இருக்கும் சில நபர்கள், அரசாங்கத்திடமிருந்து பல்வேறு சலுகைகளைப் பெற்றுக்கொண்டு, கிராம மட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற சட்டவிரோத மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நபர்களின் விபரங்கள் மற்றும் அவர்களின் மோசடிப் பின்னணிகள் அனைத்தையும் எதிர்வரும் நாட்களில் ஊடகவியலாளர் சந்திப்புகள் மூலம் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக வெளிப்படுத்துவோம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.