ஈரானுக்கு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் உடன்பாடு எட்டப்படாவிட்டால் உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணை மீது அமெரிக்கா கட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளார்.
தேவைப்பட்டால் ஹோர்முஸ் நீரிணையை நாங்கள் கைப்பற்றுவோம். ஈரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் அங்கு செல்லும் கப்பல்களிடமிருந்து கட்டணமும் வசூலிப்போம் என ட்ரம்ப் தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணை
இதேவேளை, ஈரானிய அரச ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதாகவும், போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஆரம்ப உடன்பாட்டின் முதல் நிபந்தனையை அமெரிக்கா நடைமுறைப்படுத்தத் தவறியதாகவும் குற்றம்சாட்டிய ஈரானிய இராணுவத் தலைமையகம், ஹோர்முஸ் நீரிணையை மூட நடவடிக்கை எடுக்கப்படலாம் என அறிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் ட்ரம்ப்மறைமுகமாக எச்சரித்தார்.
மேலும், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வென்ஸ் தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஈரான் பிரதிநிதிகளுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
ஹோர்முஸ் நீரிணையை மூடினால் உங்களுக்கென ஒரு நாடே இருக்காது. உங்கள் நாட்டிற்கே திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்படும் என தாம் ஈரானிய அதிகாரிகளிடம் கூறியதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு
மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெயில் 20 சதவீதத்தை அமெரிக்கா பெறும் வகையில், அந்த நீரிணையின் “பாதுகாவலராக” அமெரிக்கா செயல்பட முடியும் என்ற தனது நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அதேவேளை, லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களைப் பற்றியும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லெபனானில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஈரானின் பிரதிநிதி குழுக்கள் உடனடியாக தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இல்லையெனில் கடந்த வாரத்தை விட இன்னும் கடுமையாக ஈரானை தாக்குவோம் என ட்ரம்ப் சமூக ஊடகமான ட்ரூத்தில் பதிவிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்த கருத்துகள் மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.