நண்பர்களுடன் நீராடச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி..!
புத்தளம் - ஆராச்சிகட்டுவ செங்கல்ஓயா சாலையின் மணல் முனைப் பகுதியில் தனது பாடசாலை நண்பனுடன் நீராடச் சென்ற 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம், நேற்றுமுன்தினம்(19.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆராச்சிகட்டுவ - வைரன்கட்டுவ பகுதியைச் சேர்ந்த எஸ்.ஜே.எம்.லகிந்து சாமிக என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நண்பர்களுடன் நீராடிச் சென்ற சிறுவன்
மேற்படி மாணவன், சிலாபம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்று வந்துள்ளார். இவரது, மூத்த சகோதரர்கள் இருவரைக் கொண்ட இந்தக் குடும்பத்தின் இளைய மகனான லகிந்துவின் தந்தை சிலாபம் பிரதேச செயலகத்திலும், தாய் தனியார் நிறுவனம் ஒன்றிலும் பணியாற்றி வருகின்றனர்.

நேற்றுமுன்தினம்(19) பாடசாலை முடிந்து வீடு திரும்பிய லகிந்து, தனது பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருந்த சமயத்தில், நண்பனுடன் இணைந்து செருப்பு வாங்குவதற்காக ஆராச்சிகட்டுவ பகுதிக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
எனினும், அவர்கள் இருவரும் ஆராச்சிகட்டுவ நகருக்குச் செல்லாது, இரகசியமாக செங்கல்ஓயா மணல் முனைப் பகுதிக்கு நீராடச் சென்றுள்ளனர்.
மாணவன் உயிரிழப்பு
அங்கு நீராடிக் கொண்டிருந்த போது, செங்கல்ஓயாவின் ஆழமான குழிக்குள் விழுந்து லகிந்து நீரில் மூழ்கியுள்ளார். இதன்போது, அவருடன் சென்ற நண்பன் அதிர்ஷ்டவசமாக தப்பியதுடன், கரையேறி தனது நண்பனைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார்.
சத்தம் கேட்டு விரைவாக அங்குள்ளவர்கள் அவரை தூக்கி லகிந்துவை மீட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.