சமூகப் பொருளாதார தரவு அறிக்கை முற்றிலும் தவறானது! மக்களை திசை திருப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் சாடல்
அரசு, மத்திய வங்கி மற்றும் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இணைந்து வெளியிட்டுள்ள 2026 ஆண்டுக்கான சமூகப் பொருளாதார தரவுகள் குறித்த அறிக்கை முற்றிலும் தவறானது என்றும், நாட்டின் 220 இலட்சம் மக்களையும் திசைதிருப்பும் வகையில் பழைய தரவுகளைப் பயன்படுத்தி இது தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (29.09.2026) விசேட கூற்றொன்றை முன்வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட தரவுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், அறிக்கையின் முதல் 18 பக்கங்கள் வரை பொருளாதார சுட்டிகள், பணவீக்கம், ஏற்றுமதி - இறக்குமதி மற்றும் ஆசிய நாடுகளுடனான ஒப்பீடுகளுக்கு 2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளின் அண்மைய புதுப்பிக்கப்பட்ட தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், நாட்டின் சமூக - பொருளாதார நிலைமை மற்றும் வறுமை பற்றிக் குறிப்பிடும் 19 ஆம் பக்கம் முதல் 34 ஆம் பக்கம் வரையிலான தகவல்களுக்கு 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளின் காலாவதியான தரவுகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.

வீடொன்றின் வருமானச் செலவு ஆய்வு, மாகாண மட்ட நிலை, வீட்டு வசதிகள், எரிசக்தி நுகர்வு, சமையல், சனத்தொகைப் பரம்பல் மற்றும் தனிநபர் நாளாந்த உணவு ஆற்றல் நுகர்வு போன்ற முக்கியமான பிரிவுகளுக்கே இந்தப் பழைய தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஏனையவற்றுக்கு 2025 தரவுகளைப் பயன்படுத்திய மத்திய வங்கியும் திணைக்களமும், வறுமைத் தரவுகளை மட்டும் ஏன் மறைத்தன? ஒரு நபர் 30 நாள்கள் வாழ்வதற்கு 17,315 ரூபா போதுமானது என அரசு கூறுவது மக்களை ஏமாற்றும் முற்றிலும் பொய்யான கூற்றாகும். நாடு வங்குரோத்தடைந்த காலத்திலிருந்து இன்று வரை வீடொன்றின் வருமானச் செலவு ஆய்வை நடத்தவோ அல்லது வறுமைக் கோட்டைத் தெளிவாக அடையாளம் காணவோ அரசு தவறிவிட்டது.
ஒரு நபருக்கான வறுமைக் கோடு
அரசின் இந்த மோசடி கையும் களவுமாக மாட்டியுள்ள நிலையில், இதனை வெறும் 'அச்சுப் பிழை' எனக் கூறி மூடிமறைக்க முயலக் கூடாது. உலக வங்கியின் 2026 அறிக்கையின்படி, ஒரு நபருக்கான வறுமைக் கோடு ஒரு நாளைக்கு 8.3 அமெரிக்க டொலர் (சுமார் 2 ஆயிரத்து 724 ரூபா) ஆகும்.
அதனடிப்படையில் இலங்கையின் தற்போதைய வறுமை விகிதம் 65.4 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், மொத்த வீடுகளில் 33 சதவீதமான குடும்பங்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்கு உள்ளாகியுள்ளன.

உலக வங்கியின் கணிப்பின்படி 2028 ஆம் ஆண்டளவிலேயே இந்த வறுமை நிலைமை 63.4 சதவீமாகக் குறையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்டம் இவ்வாறான தவறான மற்றும் காலாவதியான தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டால் அது நாட்டுக்குப் பெரும் ஆபத்தாக முடியும். இது தொடர்பாக எந்த நேரத்திலும் எந்தத் தரப்பினருடனும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள நான் தயார்.
எனவே, பழைய தரவுகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். வரவிருக்கும் வரவு - செலவுத் திட்டத்துக்கு முன்னதாக நாட்டின் வறுமை குறித்த உண்மையான, புதுப்பிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியும் மத்திய வங்கியும் உடனடியாக வெளியிட வேண்டும் என்றார்.