மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த யானைகள் வெளியேற்றும் நடவடிக்கை
மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை நேற்று(24.01.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள மாந்தீவுக்குள் புகுந்து யானைகள், வவுணதீவு பிரதேசத்தில் உள்ள வயல்களில் தொடர்ச்சியாக சேதமாக்கி வந்துள்ளன.
தற்போது அறுவடை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் யானைகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

நடவடிக்கை
இது தொடர்பில், அந்தப் பகுதி மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைவாக, நேற்று (24) இரவு வனஜீவராசிகள் திணைக்களத்தினரும், அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் இணைந்து, குறித்த யானைகளை அந்தப் பகுதிகளிலிருந்து காடுகளுக்குள் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஒன்பதுக்கும் மேற்பட்ட யானைகள் இவ்வாறு புகுந்துள்ளதன் காரணமாக வவுணதீவு பகுதி மக்கள் இரவு வேளைகளில் அச்சத்துடனேயே கழித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று, யானைகளை அப்பகுதியிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளதுடன், பொதுமக்களின் முறையான ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே அதனை செயற்படுத்த முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெரும் நெருக்கடி நிலையால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் - அமைச்சர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை