உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ள சுமந்திரன்
இணையப் பாதுகாப்பு சட்டமூலத்தை சட்டமாக நடைமுறைப்படுத்த சான்றளித்த சபாநாயகரின் செயலை சவால் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இணையப் பாதுகாப்புச் சட்டத்திற்கு சபாநாயகரின் சான்றிதழ் செல்லாது என அறிவிக்குமாறு சுமந்திரன் தனது மனுவில் கோரியுள்ளார்.
மனுவில் கூறப்பட்டுள்ள விடயம்
இணையப் பாதுகாப்பு யோசனை, உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு இணங்கச் செயற்படுத்தப்படவில்லை என்று மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை மனுதாரர், தமது மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தின்படி, யோசனையின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை.
இதன்படி சபாநாயகரால் சான்றளிக்கப்பட்ட சட்டத்தில் 13 முரண்பாடுகள் இருப்பதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். அத்துடன் அது, சட்டமாக இயற்றப்படுவதற்கு ஆதரவாக மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் தேவைப்படும் என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.
வாக்கெடுப்பு
நாடாளுமன்ற நடைமுறையின் அடிப்படையில் சட்டமூலம் ஒன்று அரசியலமைப்பிற்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தேவைப்படும் போதெல்லாம், ஆதரவாக வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கண்டறிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
எனினும் யோசனை தொடர்பான இரண்டாவது வாசிப்பிலோ அல்லது மூன்றாம் வாசிப்பிலோ மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினரின் ஆதரவை நாடாளுமன்றம் பெறவில்லை என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அரசியல் சட்டத்தின்படி இணையப் பாதுகாப்பு யோசனை ஒருபோதும் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |