விவசாயிகளுக்கு உயர்தர நாட்டுத் துப்பாக்கிகளை வழங்க தீர்மானம்
இலங்கையில் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த நாட்டுத் துப்பாக்கியின் பயன்பாட்டை அனுமதிப்பது என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின், கொள்கை மற்றும் செயற்பாட்டு அதிகாரி ஜனக விதானகே எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
கேகாலை மாவட்டத்தில் விவசாயத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் குரங்குகளை கட்டுப்படுத்தும் நோக்கில் விவசாயிகளுக்கு உயர்தர நாட்டுத் துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படுமென, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே ஜனக விதானகே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“குரங்கு மற்றும் மர அணில்களை விரட்ட அல்லது கட்டுப்படுத்த நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்துவது என்ற நடைமுறை தொடங்கிவிட்டால், அது இதர விலங்குகளையும் கடுமையாக பாதிக்கும்.
தவறான பயன்பாடு
அந்த துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் ஈயத்தினால் ஆன சிறிய குண்டு ஏனைய விலங்கினங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
சில சமயங்களில் அந்த விலங்குகள் உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கு குரங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாட்டுத் துப்பாக்கி தீர்வாகாது. அதைவிட விஞ்ஞானபூர்வமான தீர்வுகள் இருக்கின்றன.
இந்த நாட்டுத் துப்பாக்கி மூலம் சுட்டு விலங்குகளை அச்சுறுத்தி விரட்டுவது என்பது தற்காலிகமான தீர்வு தான். அது நிரந்தர தீர்வுக்கு வழி செய்யாது.
இலங்கையில் அதிகளவு நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தும் நிலைமை அதிகரித்துள்ளதோடு அதனைப் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பத்திரம் தேவையில்லை.
விவசாயத்தை பாதுகாக்கவென விவசாயிகளுக்கு வழங்கப்படும் நாட்டுத் துப்பாக்கியை அவர்கள் வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு என அளிக்கப்படும் நாட்டுத் துப்பாக்கி வேறு சில வழிகளில் தவறாகவும், சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்தும் அபாயமும் உள்ளது.
மனித - விலங்கு மோதல்
அத்துடன், குரங்கு மற்றும் மர அணிலை இலக்கு வைத்து சுடப்படும்போது வேறு விலங்குகளும் உயிரிழக்கக் கூடும்.
மனிதத் தேவைக்காக விலங்குகளின் வாழ்விடமான காடுகள் அழிக்கப்படுவதே மனித - விலங்கு மோதல் மற்றும் விவசாய உற்பத்திகளை விலங்குகள் சேதப்படுத்துவதற்கு பிரதான காரணமாக அமைகிறது.
இதற்கமைய காடுகளை வேகமாக அழித்து அவற்றை விவசாய நிலங்களாக மாற்றும் போது, வனவிலங்குகள் உணவைத் தேடி மக்கள் குடியிருப்பை நோக்கி வருவது வழமையாகிவிட்டது.
தமது வாழ்விடம் குறையும் போது வனவிலங்குகள் காடுகளைவிட்டு வெளியே வரும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.
பாதுகாப்பற்ற முறையில் கருவிகளை பயன்படுத்தி விலங்குகளை விரட்ட முயற்சிப்பதை விட, விஞ்ஞான பூர்வமான முறைகளை பயன்படுத்தி விலங்குகளுடைய பாதிப்பினை கட்டுப்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம், விவசாயத் திணைக்களம் மற்றும் அரசாங்கம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உணவுச் சங்கிலி
இலங்கையில் குரங்குகளால் மட்டுமே பிரச்சினை இல்லை. யானைகள், மயில்கள் போன்றவையாலும் பிரச்சினைகள் உள்ளன.
மயில்களை உணவாகக் கொள்ளும் நரிகள் பெருமளவு சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டன. அவை மயிலின் முட்டைகளை சேதப்படுத்தும். இது ஒரு உதாரணமே.
இப்படி உணவுச் சங்கிலியில் ஒவ்வொரு விலங்கும் மற்றொன்றை சார்ந்தே உள்ளன. ஒன்றை அழிக்கும் போது மற்றொன்று பாதிக்கப்படும். அல்லது அந்த விலங்குகளால் விவசாயம் பாதிக்கப்படும்.
உணவுச் சங்கிலித் தொடர் என்பது அறிவியல்ரீதியாக மிகவும் முக்கியமானது. அதை இலங்கை அரசு உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |