ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலைய விவகாரம் தொடர்பில் மேலும் மூவர் கைது
கொழும்பு - ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேக நபர்களுக்கு பார்வையாளர் ஒருவர் விசம் கொடுத்த சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 22, 24 மற்றும் 26 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கொட்டாஞ்சேனை, ஊர்கொடவத்தை மற்றும் கொழும்பு 13 பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள முன்னணி குற்றவாளி ஒருவரின் உத்தரவுக்கமைய இந்த குற்றச்செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஜிந்துபிட்டிய துப்பாக்கிச் சூடு
இந்நிலையில், முன்னதாக ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள், பார்வையாளர் ஒருவரால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பால் பொதியை உட்கொண்டதன் காரணமாக, கடும் சுகவீனமடைந்தனர்.
அவர்கள் இருவரும் அண்மையில் ஜிந்துபிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் துப்பாக்கிதாரி ஒருவரின் காதலி பெப்ரவரி 07 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் அவர்களைப் பார்வையிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து மற்றுமொரு பார்வையாளர் அவர்களுக்கு உணவு மற்றும் ஒரு பக்கெட் பால் என்பவற்றை கொடுத்துள்ளார்.
இதனையடுத்தே சந்தேகநபர்கள சுகயீனமடைந்துள்ளனர். இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலைய வாயிலில் கடமையாற்றிய மூன்று உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |