வெங்காய விலை குறித்து விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை!
இந்த ஆண்டு வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள், பெரிய வெங்காயத்திற்கு கிலோவுக்கு 275 முதல் 300 ரூபாய் வரை வழங்க அரசு பொறுப்புள்ள தரப்பினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தை விலை
ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த சந்தை விலை சுமார் 150 ரூபா முதல் 170 ரூபா வரை காணப்படுகின்றமை வருத்தமளிக்கும் நிலை என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விவசாயிகள் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வருடம் பாரிய வெங்காயம் செய்கைகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனை விலை
இருப்பினும், அவற்றின் அறுவடைக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு வெங்காயமானது குறைந்த விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் தமக்கு இலாபம் இல்லை எனவும் இதனால் பயிர்ச்செய்கைக்காக பெற்ற கடனைக் கூட செலுத்த முடியாதுள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், வெளிநாட்டில் இருந்து பெரிய வெங்காயத்தினை இறக்குமதி செய்வதால், உள்ளுர் பெரிய வெங்காயத்திற்கு விலை இல்லை எனவும், இதனால், தொழிலில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.