வடக்கு - கிழக்கில் தொடர் போராட்டம்: ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானம்
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், அரசின் அடக்குமுறைச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (10.10.2026) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசைப் பாதுகாப்பதாகக் கூறப்படும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சர்வதேச சமூகத்தாலும் உள்நாட்டுத் தரப்புகளாலும் நிராகரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
மேலும், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தி, அவற்றுக்கு உரிய அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும். தற்போதைய ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதும் கூட்டணியின் முதன்மைக் கோரிக்கைகளில் ஒன்றாகும்.

திசைதிருப்பப்படும் கோரிக்கைகள்
வெடுக்குநாறிமலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமை, யாழ்ப்பாணத்தில் திலீபனின் சிலை தொடர்பான விவகாரம் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழிகள் போன்ற பிரச்சினைகள் மூலம் தமிழ் மக்களின் உண்மையான கோரிக்கைகள் திசைதிருப்பப்படுகின்றன.
வடக்கு, கிழக்கில் தொடரும் நில அபகரிப்புகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்குச் சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக உரிய தீர்வு காணப்பட வேண்டும். தற்போதைய அரசின் கடந்த கால ஆட்சியில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.
இதனைக் கண்டித்து சாவகச்சேரியில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணப் பகுதிகளிலும் ஏனைய மாவட்டங்களிலும் தொடர்ச்சியான கண்டனப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.
பரபரப்பாகும் சவூதி விமான நிலைய தாக்குதல்! 12 பேர் பலி - பலரின் நிலைமை கவலைக்கிடம்: மூடப்படும் வான்வெளிகள்