முல்லைத்தீவு பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது: மீட்கப்பட்ட பெருமளவு பொருட்கள்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞன் புதுகுடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கைவேலி பகுதியினைச் சேர்ந்த 29 வயதையுடைய இளைஞனே நேற்று (28.11.2023) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமை
குறித்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் இவரால் களவாடப்பட்ட 16 எரிவாயு சிலிண்டர்கள், ஒரு தண்ணீர் மோட்டார், ஒரு மிதிவண்டி, ரோல்கள் கதிரைகள் மற்றும் தங்க சங்கிலி உள்ளிட்ட பெருமளவான பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனிமையில் வசிக்கும் வயோதிபர்களின் வீடுகளுக்கு செல்லும் அந்த இளைஞன் அங்கு காணப்படும் எரிவாயுசிலிண்டர், தங்க நகைகள் போன்றவற்றை கொள்ளையடித்து சென்ற சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கொள்ளையடிக்கும் பொருட்களை விற்று போதைப்பொருட்களுக்காக பயன்படுத்திவருவதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
தீவிர விசாரணை
கொள்ளை சம்பவம் தொடர்பாக புதுக்குடிப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் .கே .கேரத் தலைமையிலான குழுவினர்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.
இந்தக் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரை கைது செய்துள்ளதுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |