களஞ்சிய அறை கையாடல் விவகாரம் : முன்னாள் நீதிபதி ரஞ்சித்குமார் பிணையில் விடுதலை
விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சித்குமார் பிணையில் செல்ல மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று(13.11.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் நடைபெற்ற களஞ்சிய அறையில் கையாடல் தொடர்பில் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் முன்னிலையான நீதிபதி ரஞ்சித்குமார் கடந்த ஏப்ரல் மாதம் விளக்கமறியில் வைக்கப்பட்டார்.
முன்னாள் நீதிமன்ற நீதிபதிக்கு பிணை
இவர் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் பிணைகோரி பிணை விண்ணப்பம் செய்திருந்த நிலையில், அவரது பிணை விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, இந்த நிராகரிப்பு கட்டளைக்கு எதிராக மேல் நீதிமன்றில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை விசாரணை செய்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் அவரை ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப்பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.
முன்னாள் நீதிபதியின் சார்பில் சட்டத்தரணி ஜெகனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் முன்னிலையாகியிருந்தார்.
களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் நடைபெற்ற களஞ்சிய அறையில் கையாடல் தொடர்பில் பொதுச்சொத்துகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் நீதிவான் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.