ஆட்சிக்கு வந்தாலும் போராட்டம் ஓயவில்லை! அநுர வெளியிட்ட முக்கிய செய்தி
ஆட்சியாளர்களுக்குப் பயந்து வாழ்ந்த சமூகத்துக்குப் பதிலாக, ஆட்சியாளர்களைத் துணிச்சலுடன் கேள்வி கேட்கும் மற்றும் ஆக்கபூர்வமாக விமர்சிக்கும் புதிய சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு விகாரமாதேவி திறந்தவெளி அரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 37ஆவது 'கார்த்திகை வீரர்கள்' நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பலவீனமான அரசியல் அணிகள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட தலைவர்கள், வீரர் நினைவுச் சின்னத்தில் தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து இந்த நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது.
இதன்போது, மக்களால் நிராகரிக்கப்பட்டுத் தோல்வியடைந்த பலவீனமான அரசியல் அணிகள் தற்போது திசைதெரியாமல் தடுமாறி வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறான தரப்பினர் முன்னெடுக்கும் எதிர்ப்புப் போராட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாதகமானவை என்றும் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், "அடக்குமுறைகளுக்கு முகங்கொடுத்தபோது ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட வரலாறு எமக்கு இருக்கின்றது.
இவ்வாறான பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்த ஓர் அரசியல் இயக்கம் உலகிலோ அல்லது இலங்கையிலோ வேறெங்கும் இல்லை. கடந்த 61 ஆண்டுகளில் எத்தனையோ திருப்பங்கள், மாற்றங்கள் மற்றும் பல்வேறு வடிவங்களிலான சவால்களுக்கு நாம் முகங்கொடுத்துள்ளோம்.
பிரதான இலக்கு
அந்தச் சவால்களின் தன்மைகள் காலத்திற்குக் காலம் மாறியிருந்தாலும், எமது முழு வரலாற்றையும் ஒன்றிணைக்கும் ஒரு அடிப்படையான நோக்கம் உள்ளது. எமது அரசியல் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை மாற்றாமல் நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றோம்.
1988–1989 காலப்பகுதியில் அன்றைய ஆட்சியாளர்களால் எமது சகோதரர்கள் பறிக்கப்பட்டதற்கும் அந்த உயரிய நோக்கமே காரணமாக அமைந்தது.

எமது நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவது அன்றிலிருந்து எமது பிரதான இலக்குகளில் ஒன்றாக இருந்து வருகின்றது.
ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னரும் நாம் கைவிடாத இலக்கு நீதியான சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதாகும். அந்த இலக்கை முழுமையாக அடைவதற்காக நாம் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.