புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கு அனைவரும் அச்சத்தில்! பிரதி அமைச்சர் அருண்
நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின், அரசியல் கொள்கைக்கு அச்சம் அடைந்ததன் காரணமாகவே, எதிரணியினர் ஒன்று சேர்ந்து, ஊடக மாநாட்டை நடத்தி இருக்கின்றார்கள் என வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிரணியினர் ஒன்றிணைந்திருப்பது இது முதல் தடவை அல்ல. கடந்த தேர்தல்களிலும் அனைவரும் ஒன்றிணைந்தே இருந்தனர்.தற்போது தான் இது வெளிப்படையாக தெரிய வருகின்றது.
கைது
குற்றவாளிகளை எப்போது பிடிப்பீர்கள் என மக்கள் இவ்வளவு காலமாக கேட்டுக் கொண்டிருந்தனர். இப்போது நாங்கள் கைது செய்து கொண்டிருக்கிறோம்.
இதன் மூலம் காலாகாலமாக இருந்து வந்த, ஊழல் நிறைந்த ஆட்சி அதிகாரமும், இனவாதம் சூழ்ந்த அரசியல் போக்கும் இப்போது நலிவடைய ஆரம்பித்திருக்கின்றது.
இன்று இலங்கையில், தட்டு மாற்றுதல் அரசியல், தற்போது மாற்றம் அடைய ஆரம்பித்திருக்கின்றது. இதனோடு இனவாதமும் ஊழலும் நிறைந்த அரசியல் போக்கும் தடுமாற்றம் அடைந்திருக்கின்றது என்பதையே இந்த எதிர்கட்சியினரின் ஒன்றிணைவு எடுத்துக் காட்டுகின்றது.
வாக்குறுதி
ஊழல்வாதிகளை கைது செய்யும் நடவடிக்கையினை இந்த நாட்டுக்கு வரி செலுத்து மக்கள் வரவேற்கின்றனர். இதன் காரணமாக தேசிய மக்கள் சக்திக்கு நாட்டு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது.
மக்களுக்கு தேவைப்பட்ட அரசியலை நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இவ்வளவு காலமும் மக்களை ஏமாற்றி கூறு போட்டு, ஆட்சி செய்த அரசியல் நாகரீகம் இனிமேலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்த முடியாது.
நீதித்துறையில் எந்த வகையிலேனும், அரசாங்கம் தலையீடு செய்ய மாட்டாது. இது நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
