நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு கைது நடவடிக்கைகள்
யாழ்.காரைநகர் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சிகரெட்டினை சட்டவிரோமான முறையில் விற்பனை செய்த ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடமிருந்து 1200 சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட நபர் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
கிண்ணியாவில் இருவர் கைது
திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று (24) கிண்ணியா சூரங்கள் பிரதேசத்திலுள்ள சாந்தி நகர் என்ற இடத்தில் வைத்து சந்தேகநபர்களை சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் முன் குற்றங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வழிப்பறிக் கொள்ளை
யாழ்ப்பாணம் மாநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வழிப்பறிக் கொள்ளை மற்றும் திருட்டுகளில் ஈடுபட்ட இருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினரின் தகவலின் அடிப்படையில் அரியாலையைச் சேர்ந்த 22,23 வயதுடைய இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை திருநெல்வேலி சந்தைக்கு பின்புறமாக பாடசாலை வீதியில் பெண் ஒருவரிடம் தங்கச் சங்கிலியை அபகரித்து தப்பித்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் அண்மையில் யாழ்ப்பாணம் நகரில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களினால் திருடப்பட்ட இரண்டு துவிச்சக்கர வண்டிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர்களுக்கு பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன்
தொடர்புடைய வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதுடன் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.