கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே, களனி பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர் ஹஷான் ஜீவந்த மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனத்தின் (IUBF) ஒருங்கிணைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர், நாளைய தினம், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை (FR) மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளனர்.
குறித்த மூன்று செயற்பாட்டாளர்களின் சார்பில் பேசவல்ல சட்டத்தரணி நுவான் போபகே, இதனை தெரிவித்தார்.
தங்காலை தடுப்பு முகாம்
மூவரும் தற்போது தங்காலையில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வுத் திணைக்கள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது உறவினர்களுக்குச் சென்று வருவதற்கான உரிமைகள் வழங்கப்படும் எனவும் தனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று போபகே குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே அவர்களை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வைத்திருப்பது அவர்களின் மனித உரிமைகளை மீறும் செயலாகும்.
இரண்டாவதாக, கொழும்பில் போதுமான மற்றும் அதிகமான தடுப்பு மையங்கள் இருக்கும் போது, சட்டத்தரணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் எமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதற்காக, அவர்கள் தங்காலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் அடக்குமுறை
போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, கொழும்பில், ஆகஸ்ட் 18 மாலை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, இந்த மூன்று செயல்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
ஆரம்பத்தில் 72 மணிநேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர்கள் தற்போது
90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், இதற்கு பாதுகாப்பு அமைச்சு,
கடந்த திங்கட்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.