உயர்நீதிமன்றில் பொலிஸ் மா அதிபரின் சமரசத்தை ஏற்காத அதிகாரிகள்
அரகலய என்ற காலிமுகத்திடல் போராட்டக் காலப்பகுதியில் அமைச்சர்களின் வீடுகள் எரிக்கப்படுவதை தடுக்க தவறியதன் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு, தற்போது ஏற்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக பொருத்தமான பொலிஸ் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் இரண்டு அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் முன்மொழிந்த பொலிஸ் நிலையங்களை ஏற்க மறுத்துள்ளனர்.
இலங்கை பொலிஸ் மா அதிபர், உயர் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த ஐந்து பொலிஸ் பொறுப்பதிகாரிகளும் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தன.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் காமினி அமரசேகர மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் இன்றைய அமர்வை நடத்தினர்.
விசாரணையின் போது, பொலிஸ் மா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் விராஜ் தயாரத்ன, நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் மனுதாரர்களுக்கு பொருத்தமான பொலிஸ் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
இந்தநிலையில், மூன்று மனுதாரர்கள் தமக்கு முன்மொழியப்பட்ட பொலிஸ் நிலையங்களில் பணியாற்ற சம்மதம் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர்களின் மனுக்கள் மீதான விசாரணையை நீதியரசர்கள் அமர்வு முடிவுக்கு கொண்டு வந்தது.
எவ்வாறாயினும், எஞ்சிய இரண்டு மனுதாரர்கள், பொலிஸ் மா அதிபர் முன்மொழிந்த பொலிஸ் நிலையங்களை ஏற்க மறுத்தனர்,
அத்துடன் தங்களின் பதவிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனை கவனித்த உயர்நீதிமன்ற அமர்வு, குறித்த இரண்டு மனுதாரர்களின் மனுக்களை விசாரிப்பதற்காக மே 29 அன்று விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |