மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு குறித்து வெளியாகியுள்ள தகவல்
2024/2025 கல்வியாண்டுக்கான மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்குமான 2026 ஒக்டோபர் மாதத்துக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி குறித்த கொடுப்பனவு இன்று (19.11.2026) வழங்கப்படவுள்ளதாக லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம் அறிவித்துள்ளது.
நிலுவையிலுள்ள புலமைப்பரிசில் கொடுப்பனவு
இது தொடர்பான அறிவிப்பில் மேலும், 2024/2025 கல்வியாண்டுக்கான நிலுவையிலுள்ள புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை 2026 டிசம்பர் மாதத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுக்கான நிதி உதவிகளைத் தடையின்றியும் தாமதமின்றியும் பெற்றுக்கொள்ளும் வகையில், கொடுப்பனவு நடைமுறைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தமது கல்விச் செலவுகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவும்.

மாதாந்தக் கொடுப்பனவு
இதேவேளை, கடந்த இரண்டு ஆண்டுகளில் மஹாபொல புலமைப்பரிசில் மாதாந்தக் கொடுப்பனவு 5000 ரூபாயிலிருந்து 10000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் வெளிப்படையான முறையில் தடையின்றிப் புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.