ஈ.பி.டி.பி. முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
படுகொலைச் சம்பவமொன்று தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் நபரொருவரைக் கடத்திச் சென்று படுகொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒன்பதாவது பிரதிவாதி குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி: கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி, ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
கடத்தல் சம்பவம்
இச்சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, ஈ.பி.டி.பி. அமைப்பின் அப்போதைய உறுப்பினர்கள் ஒன்பது பேருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, நீண்ட காலமாக விசாரணைகள் நடைபெற்று வந்தன.

இவ்வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று தனது இறுதித் தீர்ப்பை அறிவித்தது.
குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், முதல் எட்டுப் பிரதிவாதிகளான ஈ.பி.டி.பி. முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கில் 9 ஆவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடத்தலுக்காக பயன்படுத்த வான் வண்டியையும் பொலிஸார் மீட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இக்கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக தகவல் - சரவணன்