குருந்தூர்மலை ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராட்டம்! கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை
கடந்த புதன்கிழமை (21.09.2022)முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் போராட்டம் மேற்கொண்டமைக்காக தொல்லியல்திணைக்களத்தின் முறைப்பாட்டுக்கு அமைவாக கைதுசெய்யப்பட்ட முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் குமுளமுனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் காணி அபகரிப்புக்கு எதிரான போராட்ட குழுவின் தலைவருமான இரத்தினராசா மயூரன் ஆகியோர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (22.09.2022) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தொல்லியல் திணைக்களத்தால் அபகரிப்பு
குருந்தூர் மலையை அண்டிய தமிழர் நிலங்கள் தொல்லியல் திணைக்களத்தால் அபகரிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றமையை கண்டித்தும், நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதை எதிர்த்தும் முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் போராட்டமொன்றை முன்னெடுத்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் நேற்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் முல்லைத்தீவு பொலிஸார் இவர்கள் இருவருக்கு எதிராகவும் தண்டனை சட்டக்கோவையின் பிரிவு 140, பிரிவு 146 பிரிவு 147 மற்றும் பிரிவு 344 கீழ் பி (B)அறிக்கை ஒன்றினை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.
சட்டத்தரணிகளின் வாதம்
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த அனைத்து சட்டத்தரணிகளும் ரவிகரன் ,மயூரன் சார்ப்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தமது வாதங்களை முன்வைத்துள்ளனர்.
ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த கட்டளையை மீறி குறித்த பகுதியில் தொடர்ந்தும் கட்டுமானம் நடைபெற்று வந்ததன் காரணத்தினாலேயே இவர்கள் அங்கு சென்று ஜனநாயக ரீதியில் அமைதியாக போராட்டம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகளின்
வாதங்களை அடுத்து இரண்டுபேரையும் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல
அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, அடுத்த வழக்கானது 2023 பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.