மலையக மக்களுக்கு பெருமை சேர்த்த நுவரெலியா கல்வி வலயத்தின் வரலாற்றுச் சாதனை
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் நுவரெலியா கல்வி வலயம் 73 சதவீத சித்தியைப் பதிவு செய்திருப்பது அரசியல் தரப்பினருக்கும் மலையக மக்களாகிய அனைவருக்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சாதனையாகும் என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
இன்று (19.07.2026) கொட்டகலையில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மலையகத்தின் வெற்றி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையகத்தில் ஒரு காலத்தில் ஆரம்பப் பாடசாலைகள் மட்டுமே காணப்பட்டன. ஆனால் இன்று அவை மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
அதன் விளைவாக கல்வித்துறையில் மலையகம் கணிசமான முன்னேற்றத்தைப் பதிவு செய்து வருகிறது. கடந்த காலங்களில் மலையகப் பாடசாலைகளில் கற்பித்தல் பணிக்காக வெளி மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்களை அழைத்து வர வேண்டிய நிலை காணப்பட்டது.

ஆனால் இன்று மலையகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபைகள், நீதிமன்றங்கள், பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் பொறுப்பான பதவிகளை வகிப்பது கல்வி வளர்ச்சியின் வெளிப்பாடாகும்.
இந்த முன்னேற்றத்திற்கு மாணவர்களின் அர்ப்பணிப்பும், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையுமே அடிப்படைக் காரணம்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றம்
பல ஆசிரியர்கள் தங்களது சொந்த தேவைகளைக் கூட புறக்கணித்து மாணவர்களின் எதிர்காலத்திற்காக உழைத்ததன் பயனாகவே இன்று இந்த நிலையை அடைந்துள்ளோம்.
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சேவையாற்றி வருவது அந்தப் பகுதி
மக்களுக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும்.

சாதாரண தர வெற்றியுடன் நிறுத்திக்கொள்ளாமல் உயர்தரக் கல்வியையும் தொடர்ந்து பல்கலைக்கழகம் வரை பயின்று, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள குடிமக்களாக உருவாக வேண்டும்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் தொடர்ந்தும் வழங்குவோம் என உறுதியளித்துள்ளார்.
723 மாணவர்கள் கௌரவிப்பு
இதன்போது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்த 723 மாணவர்களுக்கு பதக்கங்கள், பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

'கல்விக்கு கரம் கொடுப்போம்' என்ற தொனிப்பொருளில், கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தனது சொந்த நிதியுடனும், நலன்புரி விரும்பிகளின் ஒத்துழைப்புடனும் இந்த கௌரவிப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.




இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan