விக்டோரியா கல்லூரிக்கு முன் வெடித்த போராட்டம்..! பாடசாலையின் அதிபர் வெளியிட்ட அறிக்கை
புதிய இணைப்பு
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன் விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலையின் அதிபர் சுலபாமதி தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாடசாலையின் நடைபவனி நிகழ்வுக்கு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணிமான சுமந்திரனை அழைத்திருந்தோம்.
ஆனால் அவர் தான் இந்தியா செல்ல உள்ளவதாக தெரிவித்து இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வேண்டாம்! விக்டோரியா கல்லூரிக்கு முன் வெடித்த போராட்டம்
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நாளைய தினம் நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள கூடாது என்றும், விக்டோரியன்ஸ் ஒருவரே அதிதியாக கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து பழைய மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டமானது இன்றையதினம்(18.07.2026) சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
150வது ஆண்டு விழா
போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் "எங்கே எங்கே விழாக்குழு எங்கே, பாடசாலை நிர்வாகமே தன்னிச்சையான முடிவுகளை எடுக்காதே, விக்டோரியன்ஸே அதிதியாக வரவேண்டும்" என தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
150வது ஆண்டு விழா என்பது ஒருமுறையே வரும். அது தொடர்பான நிகழ்வுகளுக்கு எமது பழைய மாணவர்கள் யாராவதே விருந்தினராக அழைக்கப்பட வேண்டும்.

பாடசாலைக்கு தொடர்பில்லாத ஒருவர் விருந்தினராக வருவதை ஏற்றுகொள்ள முடியாது. சுமந்திரன் விருந்தினராக அழைக்கப்பட்ட விடயம் நேற்றையதினமே எங்களுக்கு தெரியும்.
இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் ஆகியோருடன் சுமூகமாக பேசி முடிப்பதற்கு நாங்கள் முயற்சித்தோம்.
ஆனால் அது பலனளிக்கவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் "பழைய மாணவர்கள் எவரும் கலந்துகொள்ள வேண்டாம், நாங்கள் பாடசாலை சமூகத்துடனேயே நிகழ்வுகளை நடாத்துகிறோம்" என்று அதிபர் கூறினார். அதன் பின்னரே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டி ஏற்பட்டது.
ஜனநாயக ரீதியிலான போராட்டம்
இந்த 150வது ஆண்டு விழாவுக்கு என ஒரு விழா ஒழுங்கமைப்பு குழு தெரிவு செய்யப்பட்டது. அது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும் பிரசுரமானது. ஆனால் அந்த விழா குழுவினரை உள்வாங்கி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவில்லை.
அந்த ஏற்பாட்டுக் குழுவினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. பழைய மாணவர் சங்கத்தினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. நாங்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் எதிர்க்கவில்லை.

எமது பழைய மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாக காணப்படுகிறது. போராட்டம் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் ஜனநாயக ரீதியாகவே முன்னெடுக்கப்படுகிறது.
எமது போராட்டத்தால் யாருக்காவது மனவுளைச்சல் ஏற்பட்டால் நாங்கள் அதற்கு பொறுப்பல்ல. எமது கருத்தினை கேட்காமல் இந்த விருந்தினர் தெரிவு இடம்பெற்றதே காரணம்.
எனவே எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். பழைய மாணவர்கள் என்ற வகையில் எமக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri