மின்சார சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
நுவரெலியா - நானுஓயா மின்சார சபை ஊழியர்களால் மின்சார சபையை தனியார் மயமாக்கலுக்கான முயற்சிகளுக்கு எதிராகவும மறு சீரமைப்பு தொடர்பான சட்டமூலத்திற்கு எதிராகவும் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (07.02.2024) நுவரெலியா மின்சார சபையின் காரியாலயத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உரிய தீர்வு வழங்கல்
இதன்போது, இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கல் மற்றும் தேசிய வளங்களை விற்பனை செய்வதை நிறுத்த கோரி பல வாசகங்களுடனான பதாகைகள் ஏந்தப்பட்டதோடு கோஷங்களும் எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய அரசாங்கம் இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் திட்டத்திற்கு எதிராக உரிய தீர்வு வழங்காவிட்டால் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக நுவரெலியா மின்சார சபை ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
செய்தி-திவாகரன்
புத்தளம்
புத்தளம் மாவட்டத்திலும் மின்சாரசபைக்கு எதிரான அமைதி போராட்டம் ஒன்று முன்டுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (07.02.2024) நண்பகல் 12.00 மணியளவில் புத்தளம் பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, மின்சாரசபை மற்றும் அனைத்து அரசாங்க வளங்களை விற்பதை உடனே நிறுத்த வேண்டும், வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களை உடனடியாக வேலைக்கு அமர்த்த வேண்டும், தொழிற்சங்க அடக்குமுறையையும் பழிவாங்கல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் மக்களின் மின் கட்டணத்தை உடனே குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பொறியியலாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |