இராகலையில் 'ட்ரெக்டர்' வண்டி விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயம் - இருவர் அவசர சிகிச்சைப்பிரிவில்
42 தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற 'ட்ரெக்டர்' வண்டி விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்திற்கு உட்பட்ட இராகலை, நடுக்கணக்கு பகுதியிலேயே இன்று காலை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்தவர்களில் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரியவருகிறது.
இராகலை ஸ்டாபோட் பிரிவிலுள்ள 42 தொழிலாளர்களை சுமார் 7 கிலோமீற்றர் தொலைவிலுள்ள டிக்சன்கோனார் பகுதிக்கு வேலைக்கு ஏற்றிச்சென்ற ட்ரெக்டர் வண்டியே, கொக்கி உடைந்ததால் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ட்ரெக்டர் வண்டியில் முன்பகுதியில் சாரதி அமர்வதற்கான பகுதியிலேயே கொக்கி மூலம் பின் பகுதி பெட்டி பொருத்தப்படும். அவ்வாறு பொருத்தப்பட்டிருந்த பெட்டியில் பயணித்தவர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது கோவிட் வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது.
சமூக இடைவெளி உட்படச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் சிறியதொரு பெட்டியில் பொறுப்பற்ற விதத்தில் 42 பேர் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளனர் எனப் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
தொழில் பாதுகாப்பற்ற வகையிலேயே அவர்களை நிர்வாகம் அழைத்து வந்துள்ளது எனவும்,
சுட்டிக்காட்டியுள்ளனர்.