சந்திரிக்கா செய்த தவறால் நிலைகுலைந்து நிற்கும் ராஜபக்சக்களின் சாம்ராஜ்ஜியம்
அண்மைய காலமாகவே, நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் பல்வேறு உள்ளக பிளவுகளையும் பாரிய பின்னடைவுகளையும் எதிர்நோக்கி வருகின்றன.
குறிப்பாக, ராஜபக்சக்களின் தரப்பு, அடுத்தடுத்த கைதுகள், தலைமைத்தும் அற்ற தன்மை என பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி தென்னிலங்கை அரசியலில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறிருக்கையில், 1951 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மேற்கொண்ட அரசியல் மாற்றமே குறித்த பிரதான எதிர்க்கட்சிகளின் சரிவுக்கு வழிவகுத்தது என ஆங்கில ஊடகம் ஒன்றின் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கட்டுரையில் கூறியுள்ளபடி, இலங்கை அரசியலில் 1956 ஆம் ஆண்டு உதயமான இருகட்சி முறைமையானது, 2026 ஆம் ஆண்டோடு 70 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இருகட்சி முறைமை
வரலாற்று சிறப்புமிக்க இந்த அரசியல் பாரம்பரியத்தில், ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (SLFP) மாறி மாறி ஆட்சியமைத்து வந்தன.

இருப்பினும், 2024இல் தேசிய மக்கள் சக்தி, 3 சதவீத வாக்கு வங்கியிலிருந்து அரியணை ஏறி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடிந்தது என்றால், அதற்கு இந்த இரு பிரதான அரசியல் மரபுகள் சந்தித்த கடுமையான வீழ்ச்சியும் உள்முரண்பாடுகளுமே பிரதான காரணமாகும்.
1970களில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தபோது, இடதுசாரி தலைவர்களை நீக்கிவிட்டு ஃபெலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவை நிதியமைச்சராக்கியது கட்சியை வலதுசாரி சர்வாதிகாரப் பாதைக்கு தள்ளியது.

இதன் விளைவாக, 1977 தேர்தலில் சுதந்திரக் கட்சி மிக மோசமான பின்னடைவைச் சந்தித்தது. அக்காலத்தில் மிதவாத ஜனநாயகவாதியாகவும், இடதுசாரிகள் மற்றும் சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெற்ற தலைவராகவும் திகழ்ந்த மைத்திரிபால சேனாநாயக்கவுக்கு (அனுராதபுரம்) தகுந்த வாய்ப்பளிக்கப்பட்டிருந்தால், 1977 தோல்வியின் தாக்கத்தைக் குறைத்து 1982 தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கு பலமான போட்டியை அளித்திருக்க முடியும்.
சந்திரிக்காவின் தவறான முடிவுகள்
ஆனால், பண்டாரநாயக்க குடும்ப அரசியலால் அவர் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிக்கு வித்திட்ட பல தவறான முடிவுகளை எடுத்தார்.

2005 இல் மகிந்த ராஜபக்சவின் வருகையைத் தடுக்க முற்பட்ட சந்திரிக்கா, 2015இல் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து யஹபாலன கூட்டாட்சியை உருவாக்கியதன் மூலம் சுதந்திரக் கட்சியை முற்றாகப் பிளவுபடுத்தினார்.
ரணிலின் நவதாராளவாதக் கொள்கைகளால் அதிருப்தியடைந்த கட்சி ஆதரவாளர்கள் மகிந்த தலைமையில் பொதுஜன பெரமுனவை (SLPP) உருவாக்கினர். 2019 இல் ஆட்சியைக் கைப்பற்றிய கோட்டாபய ராஜபக்சவின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும் உரத் தடையும் நாட்டைக் கடுமையாகப் பாதித்தன.
அதைத் தொடர்ந்து வந்த ரணில் விக்ரமசிங்கவின் கடுமையான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கியதால், ஏமாற்றமடைந்த அடிமட்ட வாக்காளர்கள் தேசிய மக்கள் சக்தியை நோக்கி நகர்ந்தனர்.

இதன் பின்னணியில் பார்க்கப் போனால், ஐக்கிய தேசியக் கட்சியை ரணிலும், சுதந்திரக் கட்சியை சந்திரிகாவும், பொதுஜன பெரமுனவை கோட்டாபயவும் சீரழித்தனர் என அந்த கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது.
மேலும், 1951 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க உருவாக்கிய அரசியல் மாற்றத்தை சந்திரிகா தலைகீழாக மாற்றியதே, இருகட்சி முறைமை உடைந்து அநுர குமார திஸாநாயக்கவின் எழுச்சிக்கு வழிவகுத்தது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கட்டுரையானது ஆங்கில கட்டுரை ஒன்றின் மொழிபெயர்ப்பாகும்..