தீவிரமடையும் காலநிலை - இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் பொதுமக்களுக்கு சிறப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருவதாகவும், 100 மி.மீ க்கு மேல் மழை பெய்யக்கூடும் என வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளரும், ஊடகப்பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை
எனவே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதால், இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"நிலச்சரிவுக்கான அறிகுறிகளை சிறப்பு கவனத்துடன் கவனியுங்கள். உங்கள் பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்திருந்தாலோ, தரையில் விரிசல்கள் இருந்தாலோ, பதிய மண் ஊற்றுகள் உருவானாலோ, அல்லது ஏற்கனவே உள்ள ஊற்றுகள் வற்றிப்போதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் அந்த பகுதிகளை விட்டு தற்காலிகமாக வெளியேறுவது மிக அவசியம்." என்றும் தெரிவித்துள்ளார்.