இலங்கையில் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் அவதானம்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சில குழந்தைகளுக்கான டயப்பர்கள் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டயப்பர்கள் பயன்படுத்தும்போது அவை கிழிவது மற்றும் மக்கிப்போவது தொடர்பாக நுகர்வோரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய , நுகர்வோர் விவகார அதிகாரசபை சிறப்பு விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.
திடீர் சோதனைகள்
இந்த விசாரணைகளின் போது, கொட்டாவை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் உள்ள இரண்டு வணிக இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்போது, பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் அல்லது இணையதள விவரங்களைக் குறிப்பிடாமல், 85ஆம் இலக்க கட்டளையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட குழந்தை டயப்பர்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியமை மற்றும் மொத்தமாக விநியோகித்தமை தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொட்டாவை கடையில் உள்ள நிறுவனத்திற்கு 10,000 ரூபாயும், புறக்கோட்டை கடையில் உள்ள நிறுவனத்திற்கு 25,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகளுக்கு...
எனவே குழந்தை டயப்பர்கள் போன்ற சுகாதார பொருட்களைக் கொள்முதல் செய்யும்போது, பொதியில் குறிப்பிட்டுள்ள இறக்குமதியாளரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட தொடர்புடைய லேபிள் தகவல்களை பரிசீலிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.

இவற்றினை பயன்படுத்தும்போது கிழிதல் அல்லது வேறு ஏதேனும் தரக்குறைபாடுகள் ஏற்படுமாயின், அலுவலக நேரங்களில்1977 என்ற உடனடி அழைத்து முறைப்பாடு செய்யுமாறும் அந்த அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.