இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ள மாலைதீவு பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு
இலங்கையின் (Sri Lanka) சுற்றுலா விசா திட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து மாலைதீவுப் (Maldives) பயணிகளுக்கு மாலைதீவு வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் புதிய இணைய விசா முறையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து மாலைதீவு பயணிகளுக்கு சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்காக அவர்கள் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா விசா
தற்போது, மாலைதீவு நாட்டவர்கள் இலங்கைக்கு வந்தவுடன் 30 நாள் சுற்றுலா விசாவை இலவசமாகப் பெற முடியும்.
30 நாட்களுக்கு மேல் தங்குவதற்கு 6 மாத இலவச விசாவிற்கு ஆன்லைனில் https://www.srilankaevisa.lk/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், நிர்வாகக் கட்டணம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கையில் இருக்கும் மாலைதீவைச் சேர்ந்தவர்கள் மற்றும் விசா நீடிப்பு தேவைப்படுபவர்கள் கொழும்பில் உள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய ஒப்பந்தத்தை பிரதிபலிக்கும் வகையில், மாலைதீவு பயணிகளுக்கு பரஸ்பர உறவை உறுதி செய்யும் விசா நடைமுறையை நிறுவுவதற்கான அதன் உறுதிப்பாட்டை மாலைதீவு வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள மாலைதீவை சேர்ந்தவர்கள் மேலதிக தகவல்களைப் பெற சம்பந்தப்பட்ட அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |