உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கிவைப்பு
புதிய இணைப்பு
கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவில் "உறுமய" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 20 இலட்சம் காணி உறுதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வின் ஒரு அங்கமாக நிகழ்வு இடம்பெற்றது.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் 1000 பேருக்கு காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இளைஞர்கள், தொழில்முனைவோருடன் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டுள்ளார். குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர்கள், தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி கேட்டறிந்ததுடன், தீர்வுகளையும் முன்வைத்துள்ளார்.
செய்தி - எரிமலை
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்(Ranil Wickremesinghe) இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
5,320 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த சுகாதார நிலையம் இன்று காலை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் நேற்றைய தினம் கலந்துகொண்டிருந்தார்.
சிறப்பு சுகாதார நிலையம்
இந்நிலையில் இன்று(25) காலை கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட போதே பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுகாதாரத்துறை அதிகாரிகள், வைத்தியசாலை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |