மாகாண சபை விவகாரத்தில் இந்தியாவை இழுப்பது சரியல்ல : மனோ கணேசன் சுட்டிக்காட்டு
மாகாண சபைத் தேர்தல் அல்லது இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை விவகாரங்களில் இந்தியாவை மீண்டும் இழுத்து உள்ளே விடுவது எமக்கும் சரி, இந்தியாவுக்கும் சரி, எவ்வித நன்மையையும் பயக்காது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு - கிழக்கை இணைத்து, இந்தியாவால் பெற்றுத்தர முடிந்த மாகாண சபை முறையை முதற்கட்ட தீர்வாகப் பெற்று, தம்மைத் திடப்படுத்திக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் வரலாறு தந்த வாய்ப்பைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தவறவிட்டுவிட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆங்கில நாளேடு ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சிங்களவர், தமிழர் ஆகிய இரு தரப்பும்
அந்த நேர்காணலில் மேலும் குறிப்பிட்டதாவது, "இலங்கை இனப் பிரச்சினை விவகாரத்தில் இந்திய அரசுக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு உள்ளது என்பது உண்மைதான்.

அந்தப் பொறுப்பு உருவாவதற்குக் காரணம், இலங்கையில் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தைச் செயலிழக்கச் செய்வதில் இந்தியாவின் இராஜதந்திர முயற்சிகளும், இராணுவத் தலையீடும் தீர்மானகரமான பங்கை வகித்தமையே ஆகும்.
அந்தச் செயல்முறையில் இந்தியா சுமார் இரண்டாயிரம் இராணுவ வீரர்களை இழந்தது. இதற்கு முன்னோடியாக, தமிழ் ஆயுத இயக்கங்கள் இந்தியாவில் பயிற்சி பெற்ற காலகட்டமும் இருந்தது.
அதன் விளைவாக, இந்தியத் தொடர்பு என்பது இலங்கையின் சிங்களவர், தமிழர் ஆகிய இரு தரப்புக்குமே உணர்வுபூர்வமான ஒரு விடயமாக மாறியது.
எனினும், இன்று மாறிவிட்ட புதிய உலக ஒழுங்குச் சூழ்நிலையில், இந்தியாவை மீண்டும் இந்த விவகாரத்துக்குள் இழுத்து வரக் கூடாது என்ற நிலைப்பாட்டில்தான் நான் இருக்கின்றேன்.
அரசியல் தீர்வுகளுக்காக சார்ந்திருக்கக் கூடாது
அண்மைக்காலங்களில், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் இந்தியப் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் சமீபத்தில் இந்திய உப ஜனாதிபதி உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர்களை நாம் சந்தித்த போதெல்லாம், 13ஆவது திருத்தம் அல்லது மாகாண சபைகள் தொடர்பான விடயங்கள் எமது நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை.

13ஆவது திருத்தச் சட்டம் என்பது இலங்கையின் அரசமைப்பின் ஒரு பகுதியாகும். எனவே, அதனைத் தக்கவைத்துக் கொள்வதா, மேம்படுத்துவதா, முழுமையாக நடைமுறைப்படுத்துவதா, சீர்திருத்துவதா அல்லது முற்றிலும் நீக்குவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது ஒட்டுமொத்த இலங்கையர்களின் பொறுப்பாகும்.
மாகாண சபையை நிர்வாக மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வுத் தளமாகப் பயன்படுத்தாமல், வெறுமனே கட்சி அரசியல் தளமாகப் பயன்படுத்தி, தங்களுக்குள் அடிபட்டு மோதி, அது ஒரு பயனற்ற அமைப்பு என்ற கருத்து மக்கள் மத்தியில் ஏற்படக் காரணமாகிவிட்டார்கள். அதன் விளைவாக, மாகாண சபை விவகாரத்தில் நாம் மீண்டும் தொடக்க நிலைக்கே திரும்பிவிட்டோம்.
ஆகவே, இந்த விவகாரத்தில் இந்தியாவை மீண்டும் இழுத்து வர முடியாது. வரவும் கூடாது. தீர்வு இலங்கைக்குள், இலங்கையர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, இலங்கையர்களாலேயே இறுதி செய்யப்பட வேண்டும்.
இந்தியாவுடன் பரஸ்பர நன்மை தரும் பொருளாதார இணைப்புகளைத்தான் நாம் மேலும் ஆழப்படுத்த வேண்டுமே தவிர, அரசியல் தீர்வுகளுக்காக அவர்களைச் சார்ந்திருக்கக் கூடாது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri