ரஷ்யாவை வலுப்படுத்த உக்ரைன் களமுனைகளுக்கு விரையும் வட கொரிய துருப்புக்கள்
உக்ரைன் அதிகாரிகளின் உளவுத்துறை மதிப்பீட்டின்படி, வட கொரியா ரஷ்யாவுக்காகப் போராடும் அதன் துருப்புக்களின் எண்ணிக்கையை மூன்று மடங்காக அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்யாவுக்கு உதவ கூடுதலாக 25,000 முதல் 30,000 வீரர்களை அனுப்ப வட கொரியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மதிப்பீட்டின்படி, எதிர்வரும் மாதங்களில் துருப்புக்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் என்றும், கடந்த நவம்பர் மாதம் அனுப்பப்பட்ட 11,000 பேர் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனின் ஊடுருவலைத் தடுக்க உதவினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கத்திய அதிகாரிகளின் கூற்று
மேற்கத்திய அதிகாரிகளின் கூற்றுப்படி, அந்த வட கொரிய வீரர்களில் சுமார் 4,000 பேர் இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ரஷ்யாவுடனான வடகொரியாவின் ஒத்துழைப்பு அதன் பின்னரே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைனிய மதிப்பீட்டின்படி, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தேவையான உபகரணங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை, ரஷ்ய போர் பிரிவுகளுடன் மேலும் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் வழங்க முடியும் என கூறியுள்ளது.
அத்தோடு பெரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கைகள் உட்பட, ரஷ்ய படையை வலுப்படுத்த, ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் உக்ரைனின் சில பகுதிகளில் வட கொரிய துருப்புக்கள் போரில் ஈடுபடும் ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது என்று உக்ரைனிய ஆவணம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.