மத்தியகிழக்கு பதற்றத்திற்கு விரைவில் தீர்வு.. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு உரையாடிய புடின் - மக்ரோன் !
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இடையே மத்திய கிழக்கு போர்பதற்றம் மற்றும் உக்ரைன் விவகாரம் குறித்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இருவரும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தொலைபேசி அழைப்பில் தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
புடினும் மக்ரோனும் கடைசியாக இருவரும் உக்ரைன் போருக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.
உக்ரைனுடனான போர்
இந்நிலையில், தற்போது ரஷ்ய ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இமானுவல் மக்ரோனுடன் விளாடிமிர் புடினின் உரையாடல் அர்த்தமுள்ளதாக இருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, உக்ரைனில் விரைவில் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளுமாறு புடினை மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான பிரான்சின் அசைக்க முடியாத ஆதரவையும் வலியுறுத்திய மக்ரோன், விரைவில் போர்நிறுத்தத்தை நிறுவ அழைப்பு விடுத்தார்.
மத்திய கிழக்கு பதற்றம்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலின் பின்னணியில் மத்திய கிழக்கின் நிலைமை மற்றும் ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்பிலும் இதன்போது உரையாடப்பட்டுள்ளது.
மேலும், ஈரானின் அணுசக்தி திட்டத்தைச் சுற்றியுள்ள நெருக்கடியையும், மத்திய கிழக்கில் உள்ள பிற வேறுபாடுகளையும் அரசியல் மற்றும் தூதரக வழிமுறைகள் மூலம் மட்டுமே தீர்ப்பதற்கு ஆதரவாக இரு தலைவர்களும் பேசியுள்ளனர்.
மத்திய கிழக்கில் அமைதியைப் பேணுவதிலும், அணு ஆயுதப் பரவல் தடை முறையைப் பாதுகாப்பதிலும் ரஷ்யா மற்றும் பிரான்சின் பொறுப்பையும் அவர்கள் குறிப்பிட்டனர்.