தைப்பொங்கலை வட மாகாணத்தின் முதன்மைப் பெருவிழாவாக மாற்றும் திட்டம் குறித்து வெளியான தகவல்
எதிர்காலத்தில் வட மாகாணக் கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சு, மாகாண சுற்றுலாப் பணியகம், மற்றும் விவசாய அமைச்சு ஆகிய மூன்று முக்கிய அமைச்சுக்களும் துறைகளும் ஒன்றிணைந்து, தைப்பொங்கல் பண்டிகையை வடக்கு மாகாணத்தின் 'முதன்மைப் பெருவிழாவாக' கொண்டாடுவது சிறப்பாக அமையும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
'வடக்கு மாகாணப் பொங்கல் விழா - 2026' இல் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்யைில், இம்முறை தைத்திருநாள் எமது வடக்கு மாகாண மக்களுக்கு மிகவும் விசேடமானதாக, நம்பிக்கையூட்டும் ஒரு பண்டிகையாக அமைந்திருக்கின்றது. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற முன்னோர் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில், நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இம்முறை தைப்பொங்கலை யாழ்ப்பாணத்தில் எமது மக்களோடு இணைந்து கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றார்.
இழப்பீடு வழங்கும் பணி
அவர் வெறுமனே ஒரு பண்டிகைக் கொண்டாட்டத்துக்காக மாத்திரம் வரவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட 'டித்வா' புயல் இடரால் பாதிக்கப்பட்ட எமது விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கான இழப்பீடு வழங்கும் பணியை அவர் ஆரம்பித்து வைத்தார். போரால் பாதிக்கப்பட்டு வீடில்லாத எமது மக்களுக்கான வீட்டுத்திட்டங்களுக்கு அடிக்கல் நட்டு, பயனாளிகளுக்கான காசோலைகளையும் வழங்கி வைத்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, எமது இளம் சந்ததியைச் சீரழிக்கும் உயிர்கொல்லி போதைப்பொருளை இந்த மண்ணிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான தேசியச் செயற்றிட்டத்தையும் அவர் ஆரம்பித்து வைத்துள்ளார். ஜனாதிபதி எடுத்திருக்கும் இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால், தமிழ் மக்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
பொங்கல் பண்டிகை என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் எமது இனத்தின் 'தனித்துவமான பண்டிகை' ஆகும். இதனை எதிர்காலத்தில் எமது மாகாணத்தில் இன்னும் சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் நாம் கொண்டாட வேண்டும். தைப்பொங்கல் என்பது உழவர் திருநாள்; அது எமது பண்பாடு; அதுவே எமது அடையாளம்.
எனவே, எதிர்காலத்தில் வடக்கு மாகாண விவசாய அமைச்சு, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து, கூட்டு முயற்சியாக இந்த விழாவை முன்னெடுக்க வேண்டும். இதன் மூலம், எமது விவசாயப் பெருமக்களைக் கௌரவிக்க முடியும்.
ஆன்மீக மற்றும் கலாசாரச் சுற்றுலா
எமது கலை கலாசாரத்தை உலகுக்குக் காட்ட முடியும். அதேவேளை, ஆன்மீக மற்றும் கலாசாரச் சுற்றுலாவை மேம்படுத்தி, அதிகளவான சுற்றுலாவிகளை எமது மாகாணத்துக்கு ஈர்க்கவும் முடியும். மன்னார் மாவட்டம் எமது மாகாணத்தின் 'அரிசி கிண்ணம்' ஆகும். பொங்கல் என்பது இயற்கைக்கு நன்றி சொல்லும் விழா. எங்களுக்கு உணவைத் தரும் 'நடமாடும் கடவுள்களான' விவசாயிகளுக்கு நன்றி சொல்லும் ஒரு பெருநாள்.
ஆனால், துரதிஷ்டவசமாக, இயற்கையை நாம் அளவுக்கு அதிகமாகச் சீண்டியதன் விளைவுகளை, 'பருவகாலநிலை மாற்றம்' என்ற பாரிய அச்சுறுத்தலாக நாம் கண்ணூடாகப் பார்க்கின்றோம். முன்னர் இருந்தது போன்ற துல்லியமான மழைக்காலங்கள் இப்போது இல்லை. அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளன.
எனவே, மாறிவரும் இந்தக் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப, எமது பயிர்ச்செய்கை முறைகளையும், கால்நடை வளர்ப்பு முறைகளையும் நாங்கள் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம்.
எமது பழைமையான பாரம்பரிய முறைகளைக் கைவிடாமல், தற்போதைய காலநிலை மாற்றத்தைத் தாக்குப் பிடிக்கக்கூடிய புதிய விஞ்ஞான ரீதியான முறைகளையும் அத்தோடு உள்வாங்கிக் கொள்ளுங்கள். இயற்கையோடு இயைந்த வாழ்வுதான் சிறந்தது என்பதை இந்தப் பொங்கல் எமக்கு உணர்த்துகின்றது என்றார்.










