இலங்கை முழுவதும் நிலவும் கடும் குளிரான காலநிலை தொடர்பில் வெளியான தகவல்
இந்தியாவின் நிலப்பகுதிகளில் இருந்து வரும் காற்றின் ஓட்ட முறைகள் காரணமாக சில பகுதிகளில் காலை நேரங்களில் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயக்குநர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலை பெப்ரவரி இறுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதி வரை பெரியளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இடைப் பருவக்காற்று நிலைமை உருவாகும்.
மழைவீழ்ச்சி
எனினும் அந்த காலப்பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவிலான மழைவீழ்ச்சி கிடைக்க வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்காலிக மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என அவர் கூறியுள்ளார்.
உறைபனி
விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி போன்ற நீர்த்தேக்கங்களிலிருந்து தேவையான நீர் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் அதிகாலை வேளையில் கடும் குளிர் நிலவுவதுடன், சில மாகாணங்களில் பனிமூட்டமான சூழல் காணப்படுகின்றது.
நுவரெலியாவில் இந்த நாட்களில் உறைபனி காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 11.7 பாகை நுவரெலியாவில் பதிவாகியுள்ளது.