9 கடிதங்கள் அனுப்பியும் பதிலில்லை : பணிப்புறக்கணிப்பில் இறங்குவோம் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மருத்துவர்களின் தொழில்சார் மற்றும் நிதிசார் பிரச்சினைகள் குறித்துப் பேச்சு நடத்துவதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு மொத்தமாக 9 கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும், அரசு இதுவரை எந்தவொரு சந்தர்ப்பத்தையும் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்யப்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.
தமது தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நான்கு கடிதங்களும், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு இரண்டு கடிதங்களும், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு மூன்று கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன என்றும் அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பேச்சுகளில் ஈடுபடத் தவறுவதால்
கடந்த ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அனுப்பப்பட்ட கடிதங்களின் பிரதிகளையும் இணைத்து, ஊடகங்களுக்குப் புதிதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"நிலுவையிலுள்ள பொது விடுமுறை மற்றும் மேலதிக கடமைக் கொடுப்பனவுகளை உடன் வழங்குதல், இடையூறு, தயார்நிலை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவில் திருத்தங்களை மேற்கொள்ளுதல், மருத்துவர்களைப் பாதிக்கும் வரி விதிப்பில் மாற்றங்களைச் செய்தல் மற்றும் சம்பளத் திருத்தங்களை மேற்கொள்ளுதல், பிரத்தியேகமான இலங்கை மருத்துவ சேவையை நிறுவுதல் மற்றும் தொழில்சார் முன்னேற்ற வாய்ப்புகளை மேம்படுத்துதல், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்துதல் மற்றும் பொது சுகாதாரத் துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியே நாம் இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் கடிதங்களை அனுப்பி வைத்திருக்கின்றோம்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பான முன்மொழிவுகளையும் நாம் சமர்ப்பித்திருந்த போதிலும், அரசின் பதில் திருப்தியளிக்கவில்லை.
ஒரு பொறுப்புள்ள நிர்வாகம் மோதல்களுக்குப் பதிலாகப் பேச்சு மற்றும் இணக்கப்பாட்டின் மூலமே தொழில்சார் பிணக்குகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
தொழிற்சங்க நடவடிக்கை என்பது எமது விருப்பத்துக்குரிய தெரிவல்ல. ஆனால், அரசு தொடர்ந்தும் பேச்சுகளைத் தவிர்த்தால், தொழிற்சங்க நடவடிக்கையை நாடுவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.
அத்துடன், பேச்சுகளில் ஈடுபடத் தவறுவதால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். மருத்துவத் துறையைப் பாதிக்கும் பொருளாதார அநீதிகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணையுமாறு அரச வைத்தியர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்." என்றுள்ளது.