அரசாங்கம் அரசியல் எதிரிகளை ஒடுக்க முயற்சிக்கிறது
அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை ஒடுக்க முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் எதிரிகளை தேர்தல் களத்தில் இருந்து அகற்றுவதற்காக குற்றவியல் விசாரணைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தாம் எச்சரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தங்களுக்கு விரும்பிய தலைவர்களை தேர்வு செய்யும் பொறுப்பினை அரசாங்கம் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தயாசிறி ஜயசேகர, அரசியல் எதிரிகளைத் தகுதி நீக்கம் செய்வதற்காகக் குற்றவியல் நீதித்துறையைப் பயன்படுத்தும் ஒரு அரசாங்கம், அடுத்த தேர்தலில் வாக்காளர்களை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையற்ற தன்மையையே வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"தேர்தல் களத்தில் உங்கள் எதிரிகளை எதிர்கொள்ளும் துணிவைக் கொண்டிருங்கள்; முடிவை மக்களிடம் விட்டுவிடுங்கள்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைய, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்படும் சான்றிதழின் அடிப்படையில் சந்தேகநபரொருவரை விளக்கமறியலில் வைக்க நீதவானுக்கு இப்பிரிவு இடமளிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்பான சட்ட நடவடிக்கைகளை அவர் இதற்கான உதாரணமாக மேற்கோள்காட்டியுள்ளார்.
இவ்வாறான சான்றிதழ்களுக்கு ஆதாரமான உண்மைத் தகவல்களை ஆராய்ந்து, தடுத்து வைப்பதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்னர் நீதவான்களுக்குப் போதிய அதிகாரம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதைத் தீர்மானிப்பது நீதிமன்றங்களின் பணி என்பதை வலியுறுத்திய அவர், தடுத்து வைக்கப்படுவதற்கான காரணங்களைச் சவாலுக்கு உட்படுத்துவதற்கு ஒவ்வொரு பிரஜைக்கும் அர்த்தமுள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வாதிட்டுள்ளார்.
மேலும், 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் தற்போது பதவியிலுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தையும் ஜயசேகர கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே பணியாற்றிக் கொண்டிருக்கும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்குப் பதிலாக, எதிர்கால நீதித்துறை நியமனங்களுக்கு இம்மாற்றங்களைப் பிரயோகித்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.