இலங்கையில் காலநிலையில் ஏற்படும் திடீர் மாற்றம்! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களில் மாலை வேளைகளில் மழை பெய்வதற்குச் சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (21.11.2026) காலை வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும், மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஓரளவு பலத்த மழை பெய்யும் சாத்தியம்
குறிப்பாக, குறித்த பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இதற்கிடையில், அதிகாலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.