அமெரிக்க நாடாளுமன்ற மாற்றம் : இலங்கைக்கான கண்காணிப்பு தீவிரமடையலாம் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினரின் ஆதிக்கம் அதிகரிப்பது, இலங்கையின் மனித உரிமைகள் நிலை, வர்த்தகச் சலுகைகள் மற்றும் வொசிங்டனுடனான இராஜதந்திர உறவுகள் மீதான கண்காணிப்பை மென்மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ. பிளாக் எச்சரித்துள்ளார்.
இலங்கை மற்றும் பிராந்தியத்திற்கான தாக்கங்கள் என்ற தலைப்பில் ‘பாத்பைண்டர் பவுண்டேசன்’ நடத்திய இணையவழிக் கலந்துரையாடலில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்புக் கொள்கை
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மை பெறுவது, ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவு மற்றும் வர்த்தகக் கொள்கைகளைச் செயற்படுத்தும் அரசியல் சூழலை மாற்றக்கூடும்.

இதனால் இலங்கைக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகினாலும், மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் இராஜதந்திர விவகாரங்களில் சவால்களும் அதிகரிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தொடர்பான மோதல் மற்றும் அமெரிக்காவின் வரி விதிப்புக் கொள்கைகள் இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய காரணிகளாக உள்ளன.
குறிப்பாக, இலங்கையின் ஏற்றுமதிக்கு அமெரிக்கச் சந்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், சர்வதேச வர்த்தகத் தடைகள் அல்லது சந்தை வாய்ப்புகள் குறைவது பொருளாதார மீட்சியைப் பாதிக்கலாம்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், சுற்றுலா, வெளிநாட்டுப் பண அனுப்பல்கள் மற்றும் தேயிலை ஏற்றுமதி ஓரளவு நிலையானதாக இருந்தாலும், பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக் குறைவு கவலைக்குரியதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மாறிவரும் அரசியல் சூழல்
ஈரான் மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு, ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவு உள்ளிட்ட விவகாரங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மோதல் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் தமது சட்டமியற்றும் மற்றும் கண்காணிப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது அழுத்தம் கொடுக்க முடியும்.
இராணுவச் செலவுகள், உயிரிழப்புகள் மற்றும் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கவும் வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது, நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது, வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவமயமாக்கலைக் குறைப்பது, காணிகளை மீள ஒப்படைப்பது மற்றும் அதிகாரப் பரவலாக்கத்தை முன்னெடுப்பது போன்ற விடயங்கள் இலங்கையின் சர்வதேச உறவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் வொசிங்டனுடனான உறவுகள் இனி இராஜதந்திர மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட முடியாது.
மனித உரிமைகள், தொழிலாளர் தரநிலைகள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான அமெரிக்க நாடாளுமன்றத்தின் அணுகுமுறைகள், பொருளாதார ஒத்துழைப்புக்கான சூழலைத் தீர்மானிக்கக்கூடும்.
எனவே, அமெரிக்காவில் மாறிவரும் அரசியல் சூழல் இலங்கைக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கினாலும், உள்நாட்டுச் சீர்திருத்தங்கள் மற்றும் உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் அதிகரிக்கின்றது என்றும் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ. பிளாக் மேலும் தெரிவித்துள்ளார்.