வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி! இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - சில நாட்களுக்கு தொடருமென அறிவிப்பு
இலங்கையின் வளிமண்டலத்தில் உள்ள பனிமூட்டம் போன்ற ஒரு தோற்றப்பாடு அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு தொடரும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வடமாகாண அலுவலக பணிப்பாளர் P. துவாரகன் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவுகின்ற சூழல் மாசு தொடர்பான ஊடக சந்திப்பு இன்றைய தினம் (20.11.2026) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஊடகங்களுக்கு அவர் கூறுகையில், வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட 'டீமாக்கா' காற்றுச் சுழற்சி மற்றும் எல்லை கடந்த காற்றோட்டச் சுழற்சி காரணமாக, அண்டை நாடுகளில் உள்ள வளி மாசாக்கிகள் இலங்கையின் வான்பரப்புக்குள் நுழைந்துள்ளன.
இதன் காரணமாகத் தற்போது இலங்கையின் வளிமண்டலத்தில் பனிமூட்டம் போன்ற ஒரு தோற்றப்பாடு காணப்படுகிறது.
தர அளவீடு
உலக சுகாதாரப் பணிமனையின் அறிவிப்பின்படி, இந்த வளியின் தரம் 0 - 50 வரை ஆரோக்கியமானது. ஆனால், தற்பொழுது இந்த அளவு 150ஐ விட அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக, நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் 150ஆக காற்றின் தரம் காணப்பட்டது.

இதேவேளை வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் இன்று இந்த நிலைமை 198ஆகவும், கிளிநொச்சி மாவட்டத்தில் 175ஆகவும் அதிகரித்து பதிவாகியுள்ளது.
பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை
இந்த நிலைமை மேலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வெளியில் செல்ல நேரிடும்போது N95 போன்ற முகமூடிகளை கட்டாயம் அணிந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குறிப்பாக சுவாச நோய்கள் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam