கொழும்பில் சம்பவித்த கோர விபத்துகளில் பெண் உட்பட இருவர் பலி
கொழும்பின் இருவேறு பகுதிகளான மாலபே மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பகுதிகளில் நேற்று சம்பவித்த 2 விபத்துக்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதியதில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 79 வயதுடைய பெண் உட்பட 2 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனகுரு மாவத்தையில் ஹொரஹேன சந்தியிலிருந்து ஹோகந்தர சந்தி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, நேற்று காலை வீதியின் ஓரமாக நடந்து சென்ற பாதசாரி மீது மோதியுள்ளது.
பெண் உட்பட இருவர் பலி
இந்த விபத்தில் பாதசாரி மற்றும் மோட்டார் சைக்கிள் செலுத்துநர் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் முல்லேரியா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இதேவேளை, கல்கிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் காலி - கொழும்பு வீதியில் மொரட்டுவை நோக்கிப் பயணித்த கார் ஒன்று, நேற்று பிற்பகல் வீதியைக் கடக்க முற்பட்ட பெண் பாதசாரி மீது மோதியுள்ளது.
சாரதி கைது
பொலிஸாரின் தகவலுக்கமைய, பலத்த காயமடைந்த குறித்த பெண் பாதசாரி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இரத்மலானை பகுதியை சேர்ந்த 79 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 2 விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலபே மற்றும் கல்கிசை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.