வரவு செலவுத் திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கிய தொகை!
முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 34 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செலவினத் தலைப்புக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் சபையில் உரையாற்றும்போதே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்திற்காக 6,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் ஒதுக்கீடுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப்பெரிய செலவினம் இதுவாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடந்த காலங்களைப் போன்று ஜனாதிபதியினால் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது அரசியல் நோக்கங்களுக்காக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை எனவும் அமைச்சர் ஆனந்த விஜேபால இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை கடுமையாக குறைப்பதாக தேர்தலில் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.