மண்டைதீவு வடக்கின் இரவுகள் நிகழ்வுக்கு அனுமதி இல்லை - வேலணை தவிசாளர் அறிவிப்பு
மண்டைதீவு எக்கோரூறிச வளாகத்தில் வரும் தீபாவளியை முன்னிட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் வடக்கின் இரவுகள் நிகழ்ச்சியை நடத்த வேலணை பிரதேச சபை அனுமதி வழங்காது என சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் செயலாளருக்கு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சில தினங்களாக சமூக ஊடகம் ஒன்றில் மண்டைதீவு சுற்றுலாதளப் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கி வடக்கின் இரவு நிகழ்வு நடைபெறவுள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றது.
சபை அனுமதி வழங்காது
இந்நிலையில் இவ்விடயம் குறித்து நேற்று(22.10.026) சபை அமர்வில் உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் சபையின் ஆளுகைக்குள் இருக்கும் இந்த சுற்றுலாத்தளம் EOI(Expression of Interest) ஆர்வத்தின் வெளிப்பாடு என்னும் உடன்படிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டது.
ஆனால் அங்கு குறித்த நிகழ்வுகள் நடத்த எந்தவொரு அனுமதியோ ஒப்பந்தமோ சபை குறித்த தரப்பினருடன் மேற்கொள்ளவில்லை என தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

எனவே குறித்த ஏற்பாட்டு குழுவினரின் இந்த நிகழ்வுக்கு எத்தவித அனுமதியையும் வேலணை பிரதேச சபை அனுமதி வழங்கவில்லை.
குறித்த தரப்பினரும் எந்தவொரு அனுமதியையும் கோரவில்லை. எனவே சபையின் ஆளுகைக்குள் இருக்கும் குறித்த சுற்றுலா தளத்தில் நிகழ்வுகளை நடத்த சபை அனுமதி வழங்காது என தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் குறித்த ஒப்பந்ததாரர்கள் சபையுடனான ஒப்பந்தத்தை மீறியமை, கலாசார சீரழிவுகளுக்கு உந்துதலளித்து வருகின்றமை, சபையின் பெரும் தொகை நிதியை சீரழித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னகர்த்தப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான அனுமதியற்ற நிகழ்வுகளை குறித்த தரப்பினர் நடத்த முயற்சிப்பது வேலணையில் பெரும் அதிருப்பியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.